திருவள்ளூரை அடுத்த இருக்கும் மணவூரைச் சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு 11 மாதத்தில் நிஷாந்த் என்கிற ஆண் குழந்தை இருந்து வந்துள்ளது. நிஷாந்திற்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்திருக்கிறது. இதனால் அங்கிருக்கும் மருத்துவமனையில் நிஷாந்தை சிகிச்சைக்காக நடராஜன் அனுமதித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது.

இதனால் போரூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் நிஷாந்தை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கும் அவனின் காய்ச்சல் குணமடையாததை தொடர்ந்து சிறப்பு மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்தனர். அதில் குழந்தை நிஷாந்திற்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து நிஷாந்த் கண்காணிக்கப்பட்டு வந்தான்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை நிஷாந்த் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர்கள் குழந்தையின் உடலை பார்த்து கதறி துடித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 5 பேரும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 12 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில்தான் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கிறது. சென்னையில் மட்டும் இதுவரையில் 543 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக தர்மபுரி மாவட்டத்தில் 272 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 173 பேரும், கோவையில் 159 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர்.

மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் டெங்கு பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்பாக குழந்தைகளையே டெங்கு காய்ச்சல் அதிகம் தாக்குவதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதனால் சுகாதாரத் துறை சார்பாக தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இருக்கும் இடங்களை தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சிறியதாக காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.