பொதுமக்கள் பலர் வீடுகளில் சேரும் குப்பைகளை தெருவோரங்களில் வீசுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. மழை நேரங்களில் இதுபோன்ற குப்பைகள் சேர்ந்து கிடக்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகுவதால் டெங்கு போன்ற காய்ச்சல் பரவுகின்றது. இதை தடுக்க அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவள்ளுர் நகராட்சிக்கு உட்பட பகுதிகளில் தெருக்களில் குப்பையை வீசினால் அபராதம் விதிக்க நகராட்சி சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல்முறை குப்பையை வீசினால் 500 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை வீசினால் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீண்டும் அதே தவறை செய்தால் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு நாளை முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.

மேலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க துப்பரவு தொழிலாளர்கள் ஒவ்வொரு வீடாக வருவார்கள் என்றும், அவர்களிடம் குப்பையை சேர்க்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.