ஏற்காடு பூங்காக்களில் வெட்டி சாய்க்கப்படும் மரங்கள்: சமூக ஆர்வலர்கள் வேதனை!
ஏற்காடு பூங்காக்களில் பல வருடங்களான பசுமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
ஏற்காட்டில் உள்ள தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறைக்கு சொந்தமான அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட பூங்காக்களில் காய்ந்த நிலையில் உள்ள மரங்களின் காய்ந்த மர கிளைகளை அகற்ற அனுமதி பெற்று அதற்கு பதிலாக, பச்சை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது சுற்றுலா பயணிகள் மற்றும் வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் ஆகியவை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாக பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தோட்டக்கலை துறை சார்பாக பல்வேறு மரங்கள் நடவு செய்யப்பட்டு பெரிதாக வளர்ந்து உள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள், மரங்களின் அழகை கண்டு ரசிப்பதுடன், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஏற்காடு பூங்காக்களில் பல வருடங்களான பசுமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது.
காய்ந்த மரங்கள் மற்றும் கிளைகளை அகற்ற அனுமதி பெற்று, அந்த அனுமதியை வைத்து பல வகையான பச்சை மரங்களை வெட்டி சாய்த்து உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அண்ணா பூங்கா,ரோஜா பூங்காவில் காய்ந்த மரக்கிளைகளை அகற்ற 29 ஆயிரத்து 405 ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வெட்டி சாய்த்து உள்ள மரங்களின் மதிப்பு பல லட்சங்களை கடக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்காட்டில் உள்ள தனியார் தோட்டங்களில் விதிமுறைகளை மீறி பல வகையான மரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுவதை தொடர்ந்து, அரசு பூங்காவில் உள்ள மரங்களும் வெட்டி எடுத்துச் செல்லப்படுவது ஏற்காடு வாழ் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.