மேட்டூரில், வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக சென்ற ஆட்டோ, சாலையோரம் நடந்து சென்ற பெண் பொறியாளர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 8 பேர் மற்றும் பெண் பொறியாளர் உட்பட பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட 23-வது நேரு நகரில் ஞானக்கண் மாலை கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு ஆலயத்தில் வழிபாடு நடத்திவிட்டு 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை கவனிக்காமல் ஆட்டோ ஓட்டுநர் கண்ணன்(38) வேகமாக ஆட்டோவை இயக்கினார்.
அப்போது சாலையோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்த மேட்டூர் அனல் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த பிரவீனா (36) மோதிய வேகத்தில் சிறிது தூரம் சென்று சாலையில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இந்த விபத்தில் மேட்டூர் குமரன் நகரைச் சேர்ந்த பாவாயி(70), கோவிந்தம்மாள்(63), அங்கம்மாள்(60), கந்தாயி(85), ராஜம்மாள்(70), ஆசனா(24), அமுதா(55) ஆட்டோ ஓட்டுநர் கண்ணன்(36), பிரவீனா (36) ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடந்து சென்ற பெண் மீது ஆட்டோ மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


