சேலத்தில் நீர் தேக்க தொட்டியில் அழுகிய நாயின் உடலை வீசி கொடூரம்; கிராம மக்கள் கொந்தளிப்பு
சேலத்தில் குடிநீர் தேக்கத் தொட்டியில் உயிரிழந்த நாய் குட்டியை வீசிச் சென்ற மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ளது துட்டம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டையான் வளவு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் மிகப்பெரிய நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சுற்றுவட்டார அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் செல்கிறது. இதில் வட்டார அரசு பள்ளி கூடங்களுக்கும் இந்த நீர்தான் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் நீர் தேக்க தொட்டியின் மீது ஆபரேட்டர் அம்மாசி என்பவர் மேலே ஏறி பார்த்தபோது நீர்த்தேக்க தொட்டியின் உள்ளே ஒரு குட்டி நாய் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு கிராம மக்கள் சூழ்ந்தனர். இந்த நீர்த்தேக்க தொட்டியில் நாய்க்குட்டி இறந்த நிலையில் சென்ற நீரை கிராம மக்கள் ஏதும் அறியாமல் வழக்கம் போல் தங்களது அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தினார்கள்.
திருத்தணியில் கோலாகலமாக அரங்கேறிய முருகன், வள்ளியம்மை திருக்கல்யாண வைபவம்
நீர்த்தேக்க தொட்டியில் நாய்க்குட்டியை கொடூரமாக வீசிய சம்பவத்தை அடுத்து அந்த இடத்தில் கிராம மக்கள் கூட்டம் அதிகரித்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்துறையினர் விரைந்து வந்து, நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குடிநீருக்காக பயன்படுத்தப்படும் தொட்டியில் நாய் குட்டியை வீசிச் சென்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.