சேலம் மாவட்டத்தில் செல்போன் கேம் விளையாடியதால் பெற்றோர் கண்டித்ததில் மனமுடைந்த இரண்டு மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேம் விளையாடிக் கண்டித்த பெற்றோர்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் தனுஷ் ராஜ் (18). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருப்பதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தனுஷ் ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தூக்கிட்டு தற்கொலை

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து தனுஷ் ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

அதேபோல் சேலம் மாவட்டம் புளியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் ரிஷிகேஷ் (15) இவரும் வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரிஷிகேஷ் வீட்டின் படுக்கையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வீரகனூர் போலீசார் உடலையும் கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பவம் குறித்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.