களப்பணியில் முதல்வர்; சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் வாங்கினார்.
கள ஆய்வில் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் இன்று வருகை தந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இதனையடுத்து, சேலம் புறப்பட்ட முதலமைச்சர் திடீரென ஓமலூர் – மேட்டூர் பிரதான சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முன் அறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் இறையன்புவும் இணைந்து ஆய்வு செய்தார். வருகைப் பதிவேட்டினை பார்வையிட்ட முதலமைச்சர், அதிகாரிகள் பணியாற்றும் விதம் குறித்து கேட்டறிந்தார். மேலும் பட்டா மாறுதல் உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர், அரசின் நலத்திட்டங்கள் ஓமலூர் தாலுகாவில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளன, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஓமலூர் வட்டாட்சியர் வல்லமுனியப்பனிடம் கேட்டறிந்தார்.
மேலும் வருவாய் கிராமங்கள் வாரியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக காத்திருந்த பொதுமக்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர், எப்போது மனு வழங்கப்பட்டது, உடனடியாக தீர்வு காணப்பட்டதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் தகராறு; காவல் அதிகாரியின் மகன் மீது கொலை வெறி தாக்குதல்
பொது மக்களின் கோரிக்கைகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். தொடர்ந்து ஓமலூர் பாத்திமா பள்ளி அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் நல விடுதி மாணவிகளை சந்தித்தார். அங்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் நலம் விசாரித்த முதல்வர், மாணவ, மாணவிகளை சந்தித்தார். தொடர்ந்து சாலை நெடுகில் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சேலம் புறப்பட்டு சென்றார்.
தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம்; கடிதம் எழுதி வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை