தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Will ADMK Give Rajya Sabha Seat to DMDK?: தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்றுள்ளது. திமுகவில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருக்கும் நிலையில் அக்கட்சி சார்பில் இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக மாநிலங்களவை சீட் யாருக்கு?

ஏற்கெனவே அறிவித்தபடி மநீம தலைவர் கமல்ஹாசனுக்கும் மாநிலங்களவை சீட் கொடுக்கப்படுகிறது. அதிமுக தரப்பில் ஒரு மாநிலங்களவை சீட்டை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. கட்சியினர் பலர் மாநிலங்களவை சீட்டை கேட்டு வரும் நிலையில், தேமுதிகவும் மாநிலங்களவை சீட்டை கேட்டு வருகிறது. அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி வைத்த நிலையில், மாநிலங்களவை சீட்டை தருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி மறுப்பு

ஆனால் சில வாரங்களுக்கு முன்பு இதை மறுத்த எடப்பாடி பழனிசாமி, ''தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது குறித்து எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை'' என தெரிவித்து இருந்தார். இதற்கு நேரம் வரும்போது பதில் சொல்வோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். இப்போது மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி தங்களுக்கு சீட் தர வேண்டும் என அதிமுகவிடம் தேமுதிக கேட்டு வருகிறார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

எங்களுக்கு சீட் தருவது அதிமுகவின் கடமை

இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாநிலங்களவை சீட் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ''தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது அதிமுவின் கடமை ஆகும். அரசியலில் நம்பிக்கை மிகவும் முக்கியம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் திமுக கமல்ஹாசனுக்கு சீட் கொடுத்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம்'' என்று தெரிவித்தார்.

சீட் கொடுக்கவில்லையென்றால்???

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், ''அதிமுக மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லையென்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்; பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள், நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம்'' என்றார். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று வலுத்து வரும் கருத்து தொடர்பாக பேசிய பிரேமலதா, ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும்'' என்று கூறினார்.