Pudukkottai News: புதுக்கோட்டை மாவட்டத்தில், செல்போன் பயன்பாட்டிற்காக பெற்றோர், அண்ணன் கண்டித்ததால் மனமுடைந்த 11ஆம் வகுப்பு மாணவி பவித்ரா, கிணற்றில் குதித்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற அண்ணன் மணிகண்டனும் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டையில் மொபைல் போன் பார்ப்பதற்கு அடிமையாகி இருந்த மாணவி, பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் உள்ள மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்த சித்திரகுமார் - ஜீவிதா தம்பதியின் மகள் பவித்ரா (16). இவர்களுக்கும் 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும் இருக்கிறார். அவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார்.

பவித்ரா மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். செல்போன் பார்ப்பதற்கு அடிமையாகி இருந்த, பவித்ரா ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து மொபைலைப் பார்த்துக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர்.

பவித்ரா அதனைக் கேட்காத நிலையில், மணிகண்டன் ஆத்திரத்தில் தங்கையின் செல்போனைப் பிடுங்கி கீழே போட்டு உடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பவித்ரா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மணிகண்டனும் உடனே கிணற்றில் குதித்து தங்கை பவித்ராவைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அந்த முயற்சி பயனளிக்காமல் அண்ணன், தங்கை இருவரும் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறஇந்த மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர் கண்டித்த காரணத்தால் பள்ளி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது அந்த ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

(எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் தமிழ்நாடு அரசின் 104 என்ற மனநல மருத்துவ உதவி எண்ணில் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.)