நாகையில் மாடு முட்ட வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பேருந்தில் சிக்கி பலி
நாகையில் மாடு முட்ட வந்ததால் சாலையில் நடந்து சென்றவர் தடுமாறி கீழே விழுந்த நிலையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாகை நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்துநிலையம், கோட்டைவாசல் படி, பப்ளிக் ஆபீஸ்ரோடு, நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என முக்கிய பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சாலையின் நடுவே படுத்துக் கொள்வதாலும், குறுக்கே சுற்றித் திரிவதாலும் போக்குவரத்து நெரிசலும், சாலையின் நடுவே நின்று மாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் உறங்குவதால் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
தள்ளுபடியாகும் என்ற எண்ணத்தில் கூட்டுறவுத்துறையில் கடன் வாங்கக் கூடாது - மக்களுக்கு அமைச்சர் அறிவுரை
இந்த நிலையில் நாகை மேல கோட்டைவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் மகன் சபரிராஜன் (வயது 55). மேலகோட்டை வாசல் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற மாடு அவரை முட்ட முயன்றுள்ளது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த சபரிராஜன் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நாகை நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.