காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் அறிக்கையை திருத்த மறுத்ததால் உயர் அதிகாரிகள் என்னை பழிவாங்குவதாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டு.

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பயன்படுத்தி வந்த வாகனத்தை உயர் அதிகாரிகள் பறித்ததாகவும், இதன் காரணமாக டிஎஸ்பி சுந்தரேசன் வீட்டிற்கு நடந்தே செல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கத்தில், டிஎஸ்பி சுந்தரேசனிடம் இருந்து வாகனம் பறிக்கப்படவில்லை. முக்கிய அலுவல் பணிக்காக அவர் பயன்படுத்தி வந்த வாகனம் பெறப்பட்டு, அவருக்கு மாற்று வாகனம் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவர் பயன்படுத்தி வந்த வாகனமே அவரிடம் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஎஸ்பி சுந்தரேசன் பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “கடந்த 11ம் தேதி அமைச்சர் மெய்யநாதனின் பாதுகாப்பு பணிக்காக எனது வாகனம் தேவைப்படுவதாக கேட்டனர். ஆனால், இது வழக்கமான நடவடிக்கைக் கிடையாது. என்னுடைய வாகனத்தை நான் தரமுடியாது என்று கூறினேன். அதனை ஏற்காத அதிகாரிகள் என்னிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டதால் எனது வாகனத்தை வழங்கினேன். பின்னர் என்னிடம் வாகனம் இல்லை. அலுவலகப் பணிகளைச் செய்வதற்குக் கடினமாக இருப்பதாக நான் தொடர்ந்து முறையிட்டேன் அதன் பின்னர் பயன்படுத்தவே முடியாத நிலையில் இருந்த வாகனம் ஒன்றை எனக்கு ஒதுக்கீடு செய்தனர்.

மேலும் அமைச்சரின் பாதுகாப்பிற்காக வாகனத்தை கேட்டுப் பெற்ற நிலையில், எனது வாகனம் முதல்வரின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து நான் நேர்மையாகப் பணியாற்றுவதால் என்னை அதிகாரிகள் டார்கெட் செய்கின்றனர். குறிப்பாக காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் அறிக்கையை திருத்த மறுத்ததால் உயர் அதிகாரிகள் என்னை பழிவாங்கும் நோக்கில் நடந்து கொள்கின்றனர்.

குனிய குனிய கொட்டிக் கொண்டே இருப்பீர்களா? என்னால் எவ்வளவு தான் தாங்க முடியும்? எனக்கு என் உயிர் முக்கியம். எனக்கு ஏற்பட்டுள்ள நிலையானது, நேர்மைக்கு விடுக்கப்படும் சவால். எனது வாகனம் பறிக்கப்பட்டதற்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் ஆகிய இருவர் தான் காரணம். எனது வாகனம் பறிக்கப்பட்ட போது கூட நான் பொதுவெளியில் யாரிடமும் முறையிடவில்லை. ஆனால் அதற்கு பொய்யான காரணத்தை அதிகாரிகள் தெரிவித்ததால் தான் நான் தற்போது விளக்கம் அளிக்கிறேன். இது காலத்தின் கட்டாயம். இந்த பிரச்சினையைப் பொதுவெளியில் பேசினால் என்ன பிரச்சினை வரும் என்று தெரிந்தே தான் நான் பேசுகிறேன். என்ன? என்னை சஸ்பென்ட் செய்துவிடுவீர்களா?

தமிழகத்தில் அரசு நிர்வாகம் சரியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் அதிகாரத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் நடந்து கொள்கின்றனர் என்று குற்றம் சாட்டி உள்ளார்.