நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள வந்துள்ள நிலையில், அவரைக் காண வந்த பெண் ஒருவர் கூட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
Lady Fainted in TVK Campaign : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான விஜய், வார வாரம் சனிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் முதல் இந்த பிரச்சார பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார் விஜய். திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், அவருக்கு மக்கள் அலைகடலென திரண்டு வந்து பேராதரவு கொடுத்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும் திணறினர்.
இந்த நிலையில், இரண்டாவது வாரத்தில் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் விஜய். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து சாலை மார்கமாக நாகப்பட்டிணம் வந்தடைந்தார். அங்கும் விஜய்யை காண பெரும் கூட்டம் கூடி இருந்தது. அதுமட்டுமின்றி நாகையில் இன்று வெயில் கொளுத்தி வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்களும், இளைஞர்களும் விஜய்யை காண குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், தவெக பரப்புரையை காண வந்திருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட தவெகவினர் அங்கிருந்த 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல அவர்கள் வழிகளையும் சீர் செய்து கொடுத்தனர். அவர்களின் இந்த செயலுக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையடுத்து நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதிக்கு வந்த விஜய், அங்கு தன்னுடைய பிரச்சார வாகனத்தில் இருந்தபடி பரப்புரை மேற்கொண்டார்.
