Asianet News TamilAsianet News Tamil

மதுரை அதிமுக வேட்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - சு.வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை!

மதுரை அதிமுக வேட்பாளர் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சு.வெங்கடேசன் எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்

Su venkatesan MP warns legal against if madurai aiadmk candidate saravanan if does not stop defamation smp
Author
First Published Apr 3, 2024, 6:55 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை எம்.பி. நிதி ரூ.17 கோடி ஒதுக்கீடு இருந்தும், ரூ.5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை அதிமுக வேட்பாளர் சரவணம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், மதுரை அதிமுக வேட்பாளர் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை எம்.பி,யும், இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளாருமான சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மதுரைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன் வாக்குச் சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலிப் பொருளாக மாற்றி விடுகின்றன. மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் ஏதும் இல்லாததால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

உண்மையில் தேர்தல் பிரச்சாரம் என்பது கருத்தியலும் - களச் செயல்பாடும் முன்வைக்கப்படும் மேடைகள். அந்த மேடைகள் ஆரோக்கியமான விவாதமாக மாற்றுவதே பண்பட்ட அரசியல் . தற்போது சரவணன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் "வெங்கடேசன் எம்.பி நிதிக்கான 17 கோடி ஒதுக்கீட்டில் 5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார். மீதம் 12 கோடியை பயன்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார்.

அவர் பைனாகுலர் மூடியைத்தான் திறக்காமல் விட்டுவிட்டதாய் செய்திகள் வெளிவந்தன. உண்மையில் அவர் தனது சொந்தக் கண்களைக் கூட திறக்க மறந்து விட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்ட காலத்திலும் கூட களச் செயல்பாட்டினாலும், விரைவான தலையீடுகளினாலும் கோவிட் களத்தில் மதுரை மக்களைக் காக்க செய்த பணிகளை அருகிருந்து பார்த்தவர் தான் அன்றைய திருப்பரங்குன்றத்தின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன்.

குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை அளிப்பதில்லை: நடிகை ரோகிணி குற்றச்சாட்டு!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடியில் 16 கோடியே 96 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக 100 சதவீதம். ஒட்டுமொத்தமாக 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்துள்ளோம் . எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வளவு அதிகமான பணிகளை செய்திருப்பதே ஒரு சாதனை தான்.

ஆனால் மரியாதைக்குரிய மருத்துவர் சரவணன் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக சொல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் . அரசு இராசாசி மருத்துவமனை பெருந்தொற்று நோய் சிகிச்சை, அனைத்து அரசு நூலகங்களிலும் மாணவர் போட்டித் தேர்வுக்காக நூல்கள், மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுப்புற உயர்மின் கோபுர விளக்குகள், இளைஞர்களுக்கான கபாடி மைதானங்கள் என இந்தியாவிற்கு முன்னுதாரணம் சொல்லும் பல பணிகளை செய்துள்ளோம்.

 

 

உண்மை இப்படி இருக்க, 5 கோடி மட்டுமே செலவழித்துள்ளோம். மீதப்பணத்தை செலவழிக்க வில்லை எனக் கூறுவது அவதூறுகளை தாண்டி வேறு எதுவும் இல்லை. அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல; ஆனால் தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்குமென்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios