குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை அளிப்பதில்லை: நடிகை ரோகிணி குற்றச்சாட்டு!
குடியரசுத் தலைவர் பழங்குடியின தலைவர் என்பதால் பிரதமர் மோடியும், அவரது அரசும் மரியாதை கொடுப்பதில்லை என நடிகை ரோகிணி குற்றம் சாட்டியுள்ளார்
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பல்வேறு பகுதிகளில் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது, இந்தியா கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் மக்கள் 100 சதவீத வாக்குகள் அளிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். பாஜக அரசின் ஆட்சியில் மதவாத அரசியலையும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து பேசிய நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான ரோகிணி, திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். மகளிர் உரிமை தொகை மற்றும் இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பாஜக ஆளுகின்ற குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27 சதவீதம் மட்டுமே இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், “பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு அவருக்கென சில வரைமுறைகள் வைத்துள்ளனர். கோயில் கருவறைக்குள் அவரை விடுவதில்லை. கோயில்களை திறந்தால் அவருக்கு பாஜக அழைப்பு விடுப்பதில்லை.” என குற்றம் சாட்டினார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பொழுது ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதனால் குடியரசு தலைவருக்கு முறையான மரியாதை மோடி கொடுக்கவில்லை எனவும் ரோகிணி குற்றம் சாட்டினார்.
Loksabha Elections 2024 தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் ராகுல் காந்தி!
தொடர்ந்து பேசிய நடிகை ரோகிணி, “மல்யுத்த வீரர்களுக்கு எதிரான பாலியல் சீண்டலின் போது நடந்த போராட்டத்திற்கு கூட மோடி செவி சாய்க்கவில்லை. பாஜக அரசு செய்கின்ற அடக்குமுறைகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிக்கையாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது. பிரபல மருந்து நிறுவனம் மீது புகார் எழுந்த நிலையில், தரச்சான்று வழங்க முடியாத நிலை இருந்த சூழலில், பாஜக அரசுக்காக பல கோடி ரூபாயை அந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கிக் கொடுத்ததால், அந்த நிறுவனத்திற்கு தரச்சான்று உடனடியாக வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார். எனவே அடக்குமுறைகளை எதிர்த்து இந்தியா கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.” என கூறி வாக்கு சேகரித்தார்.
மேலும் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் அவர் வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.