மதுரையில் பெய்த கனமழையால் வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி காவல்துறை விசாரணை
மதுரையில் தொடர் கனமழையின் எதிரொலியாக நேற்று இரவு வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.
மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று மதுரை அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்நிலையில் மதுரை வைகையாற்றை ஒட்டியுள்ள மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (44) என்பவர் நேற்றிரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை; தமிழகத்திற்க ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்
அப்போது திடீரென மழை காரணமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரை முழுவதுமாக பெயர்ந்து வீட்டிற்குள் விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் மதிச்சியம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாலசுப்ரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று சுவர் இடிந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதிச்சியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.