தமிழ்நாட்டில் அடுத்த வாரம் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தில் இருந்து சற்று நிம்மதி கிடைத்துள்ளது. நேற்று தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாகை, மதுரை, தேனி, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் நாளை முதல் 20ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், 18 முதல் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 12 செ.மீ. முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் அடுத்த வாரம் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ நாம் பார்ப்பது வெறும் டிரெய்லர் ஷோ மட்டுமே. அடுத்த 5 நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்க உள்ளது.
இதனால் தமிழ்நாடு இனி தான் மெயின் பிச்சர் இன்னும் தொடங்கவில்லை. தமிழ்நாட்டிற்கு சூப்பர் நாட்கள் வரவுள்ளன. இன்று சென்னையில் தொடங்கும் வெயில் காலநிலை மீண்டும் அற்புதமான காலநிலைக்கு மாறும், எனவே இன்றே உங்கள் ரெயின்கோட்டை எடுத்துச் செல்லுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
