மதுரையில் ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்!
மதுரையில் சுமார் ரூ.1200 கோடி மதிப்பிலான ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்
மதுரையில் சுமார் 1200 கோடி மதிப்பிலான ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “இந்திய ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் இரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் முக்கியமான நகரங்களில் எல்லாம் மையமான இடங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் இந்த முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். இந்நிலையில் இப்பொழுது மதுரையில் உள்ள ரயில்வே நிலத்திற்கு ஆபத்து வந்துள்ளது. அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்திற்கும், ரயில்வே காலனியில் உள்ள நிலத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்காக தனியாருக்கு வழங்க இந்நிலங்களை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு "ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம்” (RLDA) மதுரை ரயில்வே கோட்டத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கட்டங்களாக ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
முதல் கட்டமாக அரசரடி ரயில்வே மைதானம், இதன் அளவு 11.45 ஏக்கர். இரண்டாவது கட்டமாக ரயில்வே காலனியில் உள்ள மூன்று பகுதி நிலம். இதன் அளவு 29.16 ஏக்கர். மொத்தம் 40.61 ஏக்கர். இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.1200 கோடியாகும். இவ்வளவு பெரும் சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இரயில்வேயின் சொத்து மக்களின் சொத்து, தேசத்தின் சொத்து. அதனை தனி நபர்களுக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க மாட்டோம்.” என்றார்.
ஹமாஸ் வெளியிட்ட முதல் இஸ்ரேல் பெண் பணயக்கைதி வீடியோ!
அரசரடி ரயில்வே மைதானம் மதுரையில் பல்லாயிரம் வீரர்களை உருவாக்கிய மைதானம், விளையாட்டு வீரர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நாள் தோறும் பயன்படுத்தும் மைதானம். இந்த மைதானமும், ரயில்வே காலனியும் மதுரையின் மிக முக்கிய பகுதிகளாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல் மதுரை நகரத்திற்குள் சுமார் 1550 மரங்கள் இருக்கிற இடம் ரயில்வே காலனி, இன்னும் கூடுதலாக சொல்வதானால் மதுரையினுடைய நுரையீரல் மதுரை ரயில்வே காலனி என்றும், இவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை இரயில்வே நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் சு.வெங்கடேசன் எம்.பி. கேட்டுக் கொண்டார்.
இம்முடிவினை கைவிட இரயில்வே நிர்வாகம் மறுத்தால் இந்நிலத்தை பாதுகாக்க மதுரை மக்கள் மாபெரும் போராட்ட இயக்கத்தை முன்னெடுப்பார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.