Asianet News TamilAsianet News Tamil

ஹமாஸ் வெளியிட்ட முதல் இஸ்ரேல் பெண் பணயக்கைதி வீடியோ!

பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பெண்ணின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்

Hamas releases first israeli hostage woman video smp
Author
First Published Oct 17, 2023, 10:12 AM IST

பாலஸ்தீன பிராந்தியமான காசாவின் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் தெற்குபகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து கடந்த 7ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,300 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்துள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான போரானது 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் சுமார் 4000க்கும்  மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது இஸ்ரேலை சேர்ந்த பலரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். அந்த வகையில், சுமார் 150 பேர் ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பெண்ணின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். ஹமாஸின் இராணுவப் பிரிவான Izz ad-Din al-Qassam Brigades 21 வயதான மியா ஸ்கெம் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பெண் ஒருவரின் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அப்பெண்ணின் கை கட்டுகளால் சுற்றப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

அந்த வீடியோவில் பேசும் அப்பெண், காசா எல்லைக்கு அருகில் உள்ள சிறிய இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட்டைச் சேர்ந்தவர் என தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொள்கிறார். தன்னுடை பெயர் மியா ஸ்கெம் எம்ன கூறும் அவர், தாக்குதல்கள் நடந்த நாளில் கிப்புட்ஸ் ரெய்மில் நடந்த சூப்பர்நோவா சுக்கோட் இசை விழாவில் கலந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.

 

 

அந்த விழாவில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மியா உட்பட மற்றவர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். ஒரு நிமிடத்துக்கு மேலான அந்த வீடியோவில், மியாவின் காயத்திற்கு ஒருவர் கட்டுப்போடுவதை காண முடிகிறது. தனது காயத்திற்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்ததாக மியா ஸ்கெம் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் என்னை கவனித்துக்கொள்கிறார்கள். எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். எனக்கு மருந்து கொடுக்கிறார்கள். எல்லாம் சரியாகிவிட்டது. கூடிய விரைவில் எனது வீட்டிற்கு அனுப்பும்படி மட்டுமே நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து எங்களை இங்கிருந்து சீக்கிரம் வெளியேற்றுங்கள்.” என மியா ஸ்கெம் அந்த வீடியோவில் கூறுகிறார்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடியில் 199 பணயக் கைதிகளாக உள்ளனர்: இஸ்ரேல் ராணுவம் தகவல்

கடந்த வாரம் மியா ஸ்கெம் கடத்தப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. அத்துடன், அதிகாரிகள் மியாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

மேலும், “ஹமாஸ் வெளியிட்டுள்ள காணொளியில் தம்மை மனிதாபிமானமுள்ளவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். இருப்பினும், அவர்கள் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் கொன்று கடத்தும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு. மியா உட்பட அனைத்து பணயக்கைதிகளையும் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.” என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மியா பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios