மதுரையில் உயிரைக் காவு வாங்கிய பாதாள சாக்கடை பள்ளம்; திரும்ப வருமா போன உயிர்? யார் தவறு இது?
மதுரை மாநகராட்சி 2ஆவது வார்டுக்குட்பட்ட கூடல் நகரில் சொக்கலிங்க நகர் 1ஆவது தெரு பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணியின் போது பள்ளத்தை சரிவர மூடாத நிலையில் பள்ளத்தில் நேற்று பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (45) என்ற நபர் அந்த வழியாக நடந்துள்ளார். பள்ளம் இருந்தது தெரியாமல், பாதாள சாக்கடை குழியில் விழுந்து நீண்டநேரமாக போராடி யாரும் இல்லாத நிலையில் மூச்சு திணறி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இன்று காலை உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்க வந்த மதுரை மாநகராட்சி ஆம்புலன்சும் சகதியில் சிக்கி செல்ல முடியாத அவலம் ஏற்பட்டது
இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் சாலையை சீரமைக்கக் கோரியும், உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க கோரியும் பணியில் இருந்த ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு அலங்காநல்லூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.