குமரி மாவட்ட கோவில் ஆவணங்கள் தமிழாக்கம் செய்ய கோரிய வழக்கு! - ஆட்சியர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் சொத்துக்கள் பல ஆவணங்கள் மலையாள மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன இதனை தமிழாக்கம் செய்யது பாதுகாக்க உத்தரவிட கோரி வழக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கன்னியாகுமரி தேவஸ்தானம் இணை ஆணையர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டம் ஆதிகேசவ பக்தர்கள் சேவா அறக்கட்டளை சார்பாக, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்கள் அனைத்தும் பழமையும், வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்தவை. கோயிலுக்கு சொந்தமாக அதிகளவிலான நிலங்கள் உள்ளன. இவை நீண்டகாலமாக பல்வேறு பயன்பாடுகளுக்காக அழிக்கப்பட்டு வருகிறது.
கோயில் மற்றும் சொத்துக்களின் ஆவணங்கள் மலையாள மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், சொத்துக்கள் குறித்த விபரம் முழுமையாக தெரியவில்லை. எனவே, இந்த ஆவணங்களை சிறந்த மொழி பெயர்ப்பு குழு மூலம் தமிழாக்கம் செய்யவும், புல எண்கள் விடுபடாமல் அடையாளத்துடன் எந்தவித மாறுதலும் இன்றி பதிவு செய்திடவும், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் மனுவிற்கு குமரி மாவட்ட கலெக்டர், கன்னியாகுமரி தேவஸ்தானம் இணை ஆணையர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.3க்கு தள்ளி வைத்தனர்.