தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் மிக முக்கியமானது மதுரை மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவில். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் மீனாட்சி அம்மனை தரிசிக்க வருகை தருகிறார்கள். வருடத்தின் அனைத்து நாட்களிலும் விழாக்கோலம் பூண்டிருக்கும் இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிக விமர்சையானது. திருவிழாவின் போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் வைகை கரையில் திரள்வார்கள்.

இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்க அறநிலையத்துறை முடிவு செய்தது. கடந்த தீபாவளி பண்டிகை முதலே லட்டு பிரசாதம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனதாக அதிகாரிகள் கூறினர். இந்தநிலையில் நாளையில் இருந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு இலவச பிரசாதமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக இதை தொடங்கி வைக்க இருக்கிறார். மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் தரிசித்து விட்டு வரும் வழியில் இருக்கும் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகே காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட  இருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலை போலவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட இருப்பதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த மனநலம் பாதித்த இளைஞர்..! முகநூல் மூலம் பெற்றோரிடம் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..!