கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி ராஜம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் மனோகரன். அவருக்கு சிறுவயதில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 2007 ம் ஆண்டு கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக மனோகரன் பெற்றோரை விட்டு பிரிந்துள்ளார். அதன் பிறகு பல இடங்களில் தேடியும் மனோகரன் கிடைக்கவில்லை.

இதனிடையே 'பசியில்லா தமிழகம்' என்கிற அமைப்பைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் மனநலம் பாதித்தவர்கள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் என பலருக்கு உதவி வருகின்றனர். அவர்கள் திருச்செங்கோடு பகுதியில் சுற்றித்திரிந்த மனோகரனை இரண்டு நாட்களுக்கு முன்பாக சுத்தம்செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதை படம்பிடித்து முகநூலில் பதிவிட்டுள்ளனர். அதைப்பார்த்த மலேசியாவில் வாழும் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பவர் தனது நண்பர் என்றும் அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.  

இதைத்தொடர்ந்து சேலம் மருத்துவமனைக்கு வந்த மனோகரனின் பெற்றோர், தங்கள் மகன் தான் என்பதை உறுதி செய்தனர். 12 ஆண்டுகளுக்கு பின் தொலைந்த மகனை கண்ட மகிழ்ச்சியில் கட்டித்தழுவி முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் விட்டனர். அது அங்கிருந்தவர்கள் அனைவரையும் கலங்கச் செய்தது. பிறகு சேலம் மாநகராட்சியில் காவல்துறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மீட்கப்பட்ட நபர் அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 'பெண்குழந்தை பிடிக்காது.. சொத்தும் கிடைக்காது.. அதான் உயிரோடு புதைச்சுட்டேன்'..! பச்சிளம் சிசுவை கொன்ற தந்தை பரபரப்பு வாக்குமூலம்..!

இதுகுறித்து கூறிய பசியில்லா தமிழகம் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்களது கருணை பயணம் சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் இன்னும் இதுபோன்ற பல நபர்களை மீட்டு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஒன்றரை லட்சத்திற்கு விற்கப்பட்ட பச்சிளம் ஆண்குழந்தை..! மருத்துவ பரிசோதனையில் சிக்கிய வயதான தம்பதியினர்..! பரபரப்பு தகவல்கள்..!