விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இருக்கிறது வடமருதூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மகன் வரதராஜ்(27). இவருக்கும் சவுந்தர்யா(19) என்கிற பெண்ணிற்கும் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு சவுந்தர்யா கர்ப்பமடைந்துள்ளார். அப்போதே அவரது மாமனார் துரைக்கண்ணு, ஆண்குழந்தை தான் பெற்று கொடுக்கவேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்.

இதனிடையே கடந்த மாதம் 20ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வைத்து சவுந்தர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சவுந்தர்யா சுந்தரேசபுரத்தில் இருக்கும் தாய் வீட்டில் வந்து தங்கி ஓய்வு எடுத்துள்ளார். அங்கு வந்து அவரது கணவர் வரதராஜ் அவரை பார்த்துள்ளார். பின்னர் அத்தண்டமருதூரில் இருக்கும் தனது காட்டுக்கொட்டாய் வீட்டிற்கு மனைவியையும் மகளையும் வரதராஜ் அழைத்துச் சென்றிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வழக்கம் போல சவுந்தர்யா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தனது அருகில் தூங்க வைத்துள்ளார். பின்னர் அதிகாலை விழித்து பார்த்தபோது குழந்தை அவரருகே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கணவரை எழுப்பி கேட்டுள்ளார். அதற்கு வரதராஜ் தனக்கு தெரியாது என்று முன்னுக்குப்பின் முரணாக கூறியிருக்கிறார். அதில் சந்தேகமடைந்த சவுந்தர்யா உறவினர்களுடன் சேர்ந்து தேடி பார்த்துள்ளார். அப்போது அங்கிருக்கும் ஆற்றுப் பகுதியில் குழி தோண்டப்பட்டு முடியதற்கான தடம் இருந்தது. உடனடியாக உறவினர்கள் குழியை மீண்டும் தோண்டி பார்த்திருக்கின்றனர்.

அங்கே சவுந்தர்யாவின் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்தது. இதைப்பார்த்து அவர் கதறி துடித்தார். உடனடியாக உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த திருக்கோவிலூர் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். குழந்தையின் தந்தை வரதராஜ், தாத்தா துரைக்கண்ணு ஆகிய இருவரிடமும் விசாரணை செய்தபோது பெண்குழந்தை பிறந்ததால் குழந்தையை தூக்கிச் சென்று ஆற்றுப்பகுதியில் உயிருடன் புதைத்த கொடூரம் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: ஒன்றரை லட்சத்திற்கு விற்கப்பட்ட பச்சிளம் ஆண்குழந்தை..! மருத்துவ பரிசோதனையில் சிக்கிய வயதான தம்பதியினர்..! பரபரப்பு தகவல்கள்..!

குழந்தையின் தந்தையான வரதராஜிடம் விசாரணை செய்த போது குழந்தையை கொன்ற திடுக்கிடும் தகவலை கூறினார். சவுந்தர்யா கர்ப்பமடைந்திருக்கும் போதே ஆண்குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று தான் கூறியதாகவும் அப்போது தான் தனது தந்தையின் சொத்துகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் பெண்குழந்தை பிறந்தால் கொன்று விடுவதாக மிரட்டியும் உள்ளார். அதற்கு சவுந்தர்யா, சொத்துகள் வேண்டாம், குழந்தை நல்லபடியாக பிறந்தாலே போதும் என்று தெரிவித்ததாக வரதராஜ் கூறினார்.

ஆனால் எதிர்பார்த்தது போலவே பெண்குழந்தை பிறந்ததால் அதை கொலை செய்ய முடிவெடுத்து, இரவு சவுந்தர்யா தூங்கிய பின்பு குழந்தையை ஆற்று பகுதிக்கு தூக்கிச்சென்று உயிருடன் புதைத்த திடுக்கிடும் தகவலை வரதராஜ் கூறினார். பின்னர் காலை சவுந்தர்யா குழந்தையை காணாது தன் மீது சந்தேகம் அடையவே மாட்டிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரபல ரவுடி தலை துண்டாக்கி கொடூரமாக கொலை..! மர்ம கும்பல் வெறிச்செயல்..!