தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. கோவில் குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆகம முறைப்படி சமஸ்கிருதத்தில் தான் நடத்த வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கை நடத்த வேண்டும் என தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சித் தலைவர் மணியரசன் மனு தாக்கல் செய்தார்.  இந்த நிலையில் தான் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோவிலின் குடமுழுக்கை நடத்துவதற்கு தொல்லியல் துறையில் முறையான அனுமதி பெறப்படவில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது.

தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விவகாரத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை தமிழ் மற்றும் சமஸ்கிரதம் ஆகிய இருமொழிகளிலும் பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெறும் என கூறியது. இதையடுத்து அது தொடர்பான பிராமண பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அறநிலையத்துறை அளித்த உத்தரவாதத்தின் படி தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கை நடத்தவும் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read: 'வாடகை கட்டிடமா.. ஆகச்சிறந்த அந்தர்பல்டியால இருக்கு'..! ஸ்டாலினை விடாது வெறுப்பேற்றும் ராமதாஸ்..!