முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என சில மாதங்களுக்கு முன் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். விஸ்வரூபமாக எழுந்த இந்த பிரச்சனையில் ராமதாஸிற்கு பதிலளித்த ஸ்டாலின், முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பட்டா நிலம் தான் என சில ஆதாரங்களை வெளியிட்டார். தொடர்ந்து முரசொலி அலுவலகத்தின் மூலபத்திரத்தை கேட்டு மீண்டும் ராமதாஸ் சர்ச்சையை கிளப்பினார். இந்த விவகாரத்தில் தற்போது முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் வாடகையில் இயங்கி வருவதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 'முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம்  வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?, அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்? என்று தெரிவித்திருக்கிறார்.

 

மேலும், 'முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா?  மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது  முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே  சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?, அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே  இல்லை போலிருக்கிறது!' என்றும் தனது ட்விட்டரில் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Also Read: 'கருணாநிதி ஒரு தீவிரவாதி'..! தம்பிகளிடம் பகீர் கிளப்பிய சீமான்..!