இஸ்லாமிய செயற்பாட்டாளர் பழனிபாபாவின் 23வது நினைவு நாள் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பழனிபாபா, கருணாநிதி, தாம் உட்பட அனைவருமே இங்கு தீவிரவாதிகள் தான் என குறிப்பிட்டார்.

தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவை இரண்டும் வெவ்வேறு பொருள்கொண்ட சொற்கள் மற்றும் பதங்கள் என்றார். கொண்ட கருத்தை, கொள்கையை தீவிரமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதனால் பழனிபாபா, கருணாநிதி, தாம் உட்பட அனைவருமே இங்கு தீவிரவாதிகள் தான் என்று சீமான் குறிப்பிட்டார். ஆனால் அதே கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் ஆயுதங்களை கொண்டு வீழ்த்தியவர்கள் தான் பயங்கரவாதிகள் என்றார்.

அது போன்ற சர்வாதிகாரத்திற்கும் கொடுங்கோன்மைக்கும் வேறுபாடு இருப்பதாக கூறிய சீமான், நேர்மையாக இயங்குகிறவன் சர்வாதிகாரியாக தான் இருக்க முடியம் என்று இறையன்பு கூறுவதாக குறிப்பிட்டார். நேரு, காமராஜ், லீ குவான் யூ ஆகியோர் செயல்படுத்தியதும் அவ்வாறான சர்வாதிகார ஆட்சிமுறையை என்றார். மேலும் அதுபோன்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையை தாங்களும் மக்களுக்கு வழங்க விரும்புவதாக சீமான் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

Also Read: 'குறிப்பிட்ட பிரிவினர் தான் அதிகமாக கைப்பற்றுறாங்க'..! சாதிவாரி கணக்கெடுப்பிற்கு மீண்டும் சாட்டையை சுழற்றும் ராமதாஸ்..!