மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மதுரை வர உள்ள நிலையில், அன்புமணி, விஜய்யை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Amit Shah will meet Anbumani and Vijay: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே பணிகளை முன்னெடுத்துள்ளன. சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் ஏற்கெனவே கூட்டணியை அமைத்துள்ளன. புதிதாக சில கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா இன்று மதுரை வருகிறார்.
தமிழ்நாடு வரும் அமித்ஷா
ஏற்கெனவே அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்ய தமிழ்நாடு வந்த அமித்ஷா, இப்போது 2வது முறையாக தமிழகம் வருகிறார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இன்று இரவு 8.30 மணி அளவில் மதுரை வரும் அமித்ஷா, அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். நாளை பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன்ம் செய்யும் அவர் பிற்பகல் 3 மணி அளவில் வேலம்மாள் திடலில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் அமித்ஷா
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 10,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை இணைப்பது? தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு புரிய வைப்பது, ஆளும் திமுகவின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.
அமித்ஷாவை சந்திக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன்
கடந்த முறை கூட்டணியை உறுதி செய்ய அமித்ஷா தமிழகம் வந்தபோது, பாஜக கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் வரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த முறை ஓபிஎஸ்ஸும், டிடிவி தினகரனும் அமித்ஷாவை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்களின் நிலை என்ன? என்பது குறித்து பேச உள்ளனர்.
அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி?
இதேபோல் பாமகவில் உட்கட்சி பூசல் பூதாகரமாக கிளம்பி ராமதாஸ், அன்புமணி இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. ஏற்கெனவே பாஜகவுடன் நெருக்கமாக இருக்க அன்புமணி விரும்புவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவர் அமித்ஷாவை சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய்யின் தவெக கட்சி பாஜகவுடன் கூட்டணியில் சேர உள்ளதாக அண்மைகாலமாக தகவல் பரவி வருகிறது. நடிகர் விஜய் சமீப காலமாக பாஜகவை விமர்சிப்பதில்லை என கூறப்படுகிறது.
அமித்ஷாவை சந்திக்கும் விஜய்?
இந்த நிலையில், விஜய்யும் அமித்ஷாவை சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நயினார் நாகேந்திரன் அமித்ஷா விஜய் சந்திப்பை உறுதிப்படுத்தாத நிலையில், பாஜக நிர்வாகிகள் சிலர் விஜய் அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தகவல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் சிலர் அமித்ஷாவை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
