Madurai: சுங்கச்சாவடியை உடனே அகற்றுங்கள்; மதுரையில் 2000 கடைகள் அடைப்பு, வாகனங்கள் நிறுத்தம்
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று திருமங்கலம், கப்பலூர் சிட்கோ உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நகர்புற எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால், விதிமுறைக்கு புறம்பாக 2 கிலோமீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடியை வைத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக திருமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் போது கட்டண விலக்கு அளிப்பதும், பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுமாக சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் உள்ளூர் வாகன உரிமையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தது. இந்நிலையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் முதல் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்ததால் கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து அனைத்து கடைகளிலும் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகள் வைக்கப்பட்டன.
மூன்றாம் உலகப் போரை தடுப்பதற்கு மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - கோவையில் அண்ணாமலை பேச்சு
தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் விதிமுறைக்கு புறம்பாக உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு தலைமையில் திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவுடன் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் அனைத்து வியாபாரிகள் சங்கம், மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கம் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை நிறைவேற்றும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் திருமங்கலத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளும் இயக்கப்படவில்லை. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள 450 க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
போராட்டக் குழுவினர் கடைகள் தோறும் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியார்களிடம் தெரிவித்த சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருமங்கலம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் மட்டுமல்லாது வருகிற பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாகவும், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.