தமிழகத்தில் நிலவும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் கோடை வெயில் ஏற்படுத்திய வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மழை குளிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறிய வானிலை மைய அதிகாரிகள், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த வரும் சில நாட்களுக்கு கோவை, திண்டுக்கல், சேலம், திருப்பூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் ஓரிரு இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர். மேலும் தேனி, மதுரை, நீலகிரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புகள் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காலை 11 மணி..! நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் சித்தாரில் 7 செமீ, மதுரையில் 5 செமீ மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 4 செமீ மழையும் பதிவாகி இருக்கிறது. இதனிடையே கோடை வெயிலும் பல மாவட்டங்களில் கொளுத்தி வருகிறது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 3.30 வரை திறந்த வெளிகளில் மக்கள் சுற்றித் திரிய வேண்டாம் என வானிலை மைய நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று அதிகபட்சமாக திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களில் 106 டிகிரி வெப்ப நிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.