மதுரையில் பிரமாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம்.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கலைஞரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புது நத்தம் சாலையில் ரூபாய் 215 கோடி மதிப்பீட்டில், 7 தலங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. 5.5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவிற்கு பரப்பளவு கொண்டுள்ள இந்த நூலகத்தில் தற்போது 3.5 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நூலகத்தின் முதல் தளத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் சிறார்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேகமான தியேட்டர் ஒன்றும், தமிழ் எழுத்துக்கள் வடிவிலான இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் முழுக்க முழுக்க 63, 000 புத்தகங்களுடன் தமிழ் இலக்கியப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. 3வது தளத்தில் ஆங்கில நூல்கள் மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் பிரிவுவும், நான்காவது தளத்தில் போட்டி தேர்வுக்கான நூல்கள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது தளத்தில் பாதுகாப்பகம், ஒளி மற்றும் ஒலி, காட்சியகப் பிரிவு நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆறாவது தளத்தில் நூலக நிர்வாகப் பிரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலி வடிவிலான நூல்கள் ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் தங்களது சொந்த புத்தகங்களையும் எடுத்துவந்து படிக்கலாம். போட்டித்தேர்வர்களுக்கென தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் ஹெச். சி.எல் குழும நிறுவனர் ஷிவ்நாடார், சாலமன் பாப்பையா, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள், எம். பிக்கள், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி உள்ளிட்டோறும் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
ஒரு நாள் போதும் முதல்வரே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.! இதை எதிர்பார்க்கல !!
Rajinikanth : ஜூலை 13 ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு முக்கியமான நாள் தெரியுமா?