மதுரையில் தடையை மீறி பேரணி; நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது
அண்ணா பல்கலைக்கழக மாணவ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பாஜகவினருடன் பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலம் எஃப் ஐ ஆர் ஆக பதிவு செய்யப்பட்டது. அந்த எஃப் ஐ ஆரில் மாணவியின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவை இடம்பெற்றிருந்த நிலையில், அந்த எஃப் ஐ ஆர் தகவல்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் தகவல்களை ரகசியமாக வைக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் வீட்டின் முன் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு விஜய் அட்வைஸ்!
இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் இருந்து சென்னை நோக்கி பேரணி நடத்த பாஜக மகளிர் அணியினர் திட்டமிட்டனர். இந்த பேரணியில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவும் கலந்துகொண்டார். இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றதாக நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தடையை மீறி நீதி பேரணி சென்ற பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த பேரணிக்கு பெண்கள் சிலர் கண்ணகி போல் கையில் சிலம்புடன் வந்திருந்தனர். அதேபோல் தீச்சட்டி ஏந்தியும் நடந்து வந்தனர். பேரணி தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சென்றார் நடிகை குஷ்பு
இதையும் படியுங்கள்... அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு: எஃப்.ஐ.ஆர் கசிவுக்கு என்ன காரணம்?