மதுரையில் நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் வழிப்பறி; மூவர் கைது, போலீஸ் வலை வீச்சு
மதுரை வாடிப்பட்டி அருகே நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் பணம், செல்போனை வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
திருச்சி வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த நிர்மல் கண்ணன் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டு விற்பனை செய்து வருகிறார். இவரது நண்பர் ஜெயராம் என்பவருக்கு பழக்கமான ஒருவர் திண்டுக்கல்லில் தான் அடகு வைத்த 300 சவரன் நகைகளை திருப்ப முடியாததால் அவை மூழ்கப் போவதாகவும் அதை பணம் கட்டி மீட்டு கிரையம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அதற்காக திருச்சியில் இருந்து 20ம் தேதி காரில் வந்துகொண்டிருக்கும் போது, அடகு வைக்கப்பட்ட நகை மதுரை வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் பகுதியில் இருப்பதாக கூறியதால் ஜெயராமன், நிர்மல் கண்ணன், சிவா, பிரபாகரன் ஆகியோர் ஒரு காரில் வாடிப்பட்டிக்கு வந்தனர்.
அன்று மாலை 6.30 மணிக்கு பாண்டியராஜபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் பெருமாள்பட்டி ரயில்வே ரோடு அருகே இவர்களை அழைத்துச் சென்றார். அப்போது ஆறு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நிர்மல் கண்ணனிடம் இருந்து ரூ.13 லட்சத்தையும் செல்போனையும் பறித்துக் கொண்டனர். மேலும் சிவாவிடம் இருந்து ரூ.6 லட்சத்தையும், செல்போனையும், பிரபாகரனிடம் இருந்து ஒரு செல்போனையும் பறித்து சென்றனர்.
இதுகுறித்து நிர்மல் கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் வாடிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நேற்று மாலை வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது 23), ராமராஜபுரத்தை சேர்ந்த ஆனந்த் (25 ), அர்ஜுனன் (25) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் முன்னுக்கு பின்முரணாக பதில் சொல்லியவர்கள், பின் தங்க நகை அடகு வியாபாரியிடம் ரூ.19 லட்சம் வழிப்பறி செய்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து ரொக்க பணம் ரூ.59 ஆயிரம் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.