Vandiyur Mariamman Teppakulam: குளமா? கடலா? காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் மதுரை வண்டியூர் தெப்பகுளம்
மதுரை மாநகரின் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என கூறி அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தின் தொன்மையான நகரான மதுரை பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்டது. மதுரைக்கு மேலும் சிறப்பும், அழகும் சேர்க்கும் வகையில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இந்த தெப்பக்குளம் திருமலை நாயக்கர் தன்னுடைய அரண்மனையை கட்டுவதற்கு மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட இடமே தெப்பக்குளம் ஆக உருவானது.
1000 அடி நீளமும், 950 அடி அகலமும் கொண்டு சதுர வடிவில் இந்த தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தின் ஆழம் 29 அடியாகவும், நீர் கொள்ளளவு 115 கன அடியாகவும் உள்ளது. ஆற்றில் நீர் வரும்போது மட்டுமே தண்ணீர் விடப்படும். தெப்பக்குளத்தை நிரப்ப அருகில் உள்ள வைகை ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த கால்வாய்கள் பராமரிப்பு இல்லாமல் மூடியநிலையில் தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் நிரந்தர வறட்சிக்கு இலக்கானது.
2020 இறுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் அந்த கால்வாய்கள் மீட்டெக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்து வைகை ஆற்றில் இருந்து மீண்டும் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதனால் தற்போது தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தெப்பக்குளம் முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகள் மட்டுமே தெப்பக்குளத்தில் முழுமையாக தண்ணீர் இருந்துள்ளது என்பது வரலாறு.
மதுரையில் மிகவும் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் தெப்பக்குளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு 100கும் மேற்பட்ட மாலை நேர சாலையோர கடைகளும் இயங்கி வருகின்றன. தற்போது தெப்பக்குளம் மதுரை மக்களின் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு இடமாக விளங்கி வருகிறது. கனமழை மற்றும் நீர் திறப்பு காரணமாக வைகை ஆற்றில் வரும் நீரால் மதுரை தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.
தற்போது குடிநீருக்காக வைகை அணையில் திறந்து விடபட்ட தண்ணீர் மதுரை வைகை ஆற்றுக்கு வந்தடைந்தது. மேலும் மதுரையில் பலத்த மழை பெய்ததால் வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கால்வாய் மூலம் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் சென்றதால் தெப்பக்குளமும் வேகமாக நிரம்பி வருகிறது. தெப்பக்குளம் நிரம்பி வருவதால் அப்பகுதி முழுவதும் இனி நிலத்தடி நீர் மற்றும் குடிநீருக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். தற்போது தெப்பக்குளம் தனது முழு கொள்ளளவு எட்டி கடல் போல் ரம்யமாக காட்சியளித்து வருகிறது, தற்போது அதன் பருந்து பார்வை காட்சிகள் மேலும் தெப்பக்குளத்தின் அழகை ஓங்க செய்துள்ளது.