எல்லை மீறும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்; கரூரில் கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை - வாக்குமூலத்தால் பரபர
கரூரில் நண்பருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்த பெண் பணத்தை திரும்ப கட்ட முடியாத நிலையில், நிதி நிறுவன ஊழியர்களின் கொடுமையால் விசம் குடித்து தற்கொலை.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்து தெருவைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவரது கணவர் ஜெய்லானி. கணவரின் நண்பர் அமீது என்பவருக்கு தனியார் நிதி நிறுவனம் மூலமாக எல்.இ.டி டிவி வாங்குவதற்காக கடன் வாங்கி கொடுத்துள்ளார். அமீது கடன் வாங்கிய ஒரு சில மாதத்தில் ஊரை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் பாத்திமா பீவி வாங்கி கொடுத்த கடனுக்காக, மூன்று மாதங்கள் வட்டி கட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து வட்டி கட்ட முடியாத நிலையில், தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் அவரை வட்டி கட்ட சொல்லி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் பாத்திமா பீவி தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுள்ளார். வேறொரு நிதி நிறுவனத்தில் பணம் வாங்கி தருவதாக நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
தைப்பூச திருவிழா; பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியவர்களை மெய் சிலிர்க்க பார்த்த மக்கள்
ஆனால், அதே நிதி நிறுவனம் என்பது தெரியாமல் பாத்திமா பீவி அங்கு சென்ற நிலையில், அந்த நிறுவன ஊழியர்கள் அவரை தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசி, அவரிடம் வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு வீட்டிலிருந்த டிவியை எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இருசக்கர வாகனத்தில் பாத்திமா பீவியை அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டு விட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் திடீரென சுருண்டு விழுந்த பக்தர்; நொடிப்பொழுதில் நிகழ்ந்த சோகம்
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாத்திமா பீவி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா பீவி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள் தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து இறப்பதற்கு முன்பு அவர் பேசிய வீடியோ மற்றும் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.