கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தாடி பாலாஜி தவெகவின் 2ஆம் கட்ட தலைவர்களை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் - தவெக தலைவர் விஜய்:
தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வரும் தளபதி விஜய் தற்போது நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, பெரம்பலூரில் பரப்புரை மேற்கொண்டார். அடுத்ததாக நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நிலையில் தான் கடந்த 27ஆம் தேதி சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் தான் கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
கத்திக்குத்து பட்டவர் எங்கு சிகிச்சை பெற்றார்?.. முக்கியமான பாயிண்டை பிடித்த செந்தில் பாலாஜி!
இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் மிகப்பெரிய பூகம்பமாக வெடித்தது. அதுமட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம் என்றும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கூட்ட நெரிசல் மிகுந்த அந்த சாலையில் ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது ஏன்?
விஜய் பேசிக் கொண்டிருந்த போது வாகனத்தின் மீது செருப்பு வீசி மர்ம நபர் யார்? சம்பவம் நடந்தவுடன் அவசரம் அவசரமாக பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தது ஏன்? என பல்வேறு கேள்விகளை தவெகவினர் எழுப்பினார்கள். மிக முக்கியமாக கூட்டத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக தவெவினர் சேனல்களுக்கு பேட்டியும் அளித்தனர்.
இந்த சூழலில் தான் 3 நாட்களுக்கு பிறகு தவெக தலைவர் தளபதி விஜய் வீடியோ வெளியிட்டு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தான் இருப்பேன். தன்னை என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். விரைவில் கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தான் நடிகரும், விஜய்யின் நண்பருமான தாடி பாலாஜி கரூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு தாடி பாலாஜி பதிலளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தளபதி விஜய்யுடன் இருக்கும் 2ஆம் கட்ட தலைவர்கள் தான் காரணம். தலைவருக்கு எல்லாமே தெரியும் அப்படி என்பதில்லை. இப்போது தான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் தான் படிப்படியாக ஒன்னொன்னா தெரிஞ்ச்சுக்கணும். இந்த சம்பவம் தான் அவருக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும்.
தலைவர் 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் கூட 5 மணி, 6 மணிக்கு போயிருவார். இந்த 2 ஆம் கட்ட தலைவர்கள், இந்த இடத்தை பார்த்திருக்கிறார்கள், வந்திருக்கிறார்கள், ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, இந்த டைமில் நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று இந்த 2ஆம் கட்ட தலைவர்கள் தான் தலைவரிடம் சொல்லியிருக்க வேண்டும். அதனுடைய முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும். டைமிங்கும் ஒரு ரீசன் தான்.
சார், 8.45 மணிக்கு அனுமதி வாங்கியிருக்கு சார், அந்த இடத்தை முடித்துக் கொண்டு திரும்ப இங்கு வர வேண்டும். டிராவலிங் டைம் இவ்வளவு இருக்கு என்று சொல்ல வேண்டும். இந்த 2ஆம் கட்ட தலைவர்கள் முழுக்க முழுக்க அரசியல் தெரிந்தவர்கள். அனுபவம் வாய்ந்தவர்கள். முதலில் பில்டிங் ஸ்டிராங்க இருக்க வேண்டும். அதாவது, கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும். இந்த சம்பவம் தவெக தலைவர் விஜய்க்கு நிறைய விஷயங்களை புரிய வைத்திருக்கும். என்னுடைய குற்றச்சாட்டு முழுவதும் 2ஆம் கட்ட தலைவர்கள் தான் என்று புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை குற்றம் சாட்டியுள்ளார்.
