கன்னியாகுமரியில் பெட்ரோல் வாங்க காசு இல்லாததால் பைக்கை கால்வாயில் வீசிய வாலிபர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மது போதையில் வந்துகொண்டிருக்கும் போது திடீரென இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் பாதியில் வண்டி நின்றுவிடவே, பெட்ரோல் வாங்க பணம் இல்லாத விரக்தியில் இளைஞர் ஒருவர் வண்டியை கால்வாயில் வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் செல்லும் சிறிய கால்வாயில் இருசக்கர வாகனம் ஒன்று கிடந்துள்ளது. இதனைத் அவ்வழியாக வந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர். மேலும் இரவு நேரத்தில் யாரேனும் தவறி கால்வாயில் விழுந்திருக்கலாம், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் கால்வாயில் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று எண்ணி அந்த நபரை தேடத் தொடங்கினர்.
தொடர்ந்து கால்வாயின் அருகில் உள்ள முற்புதர்களிலும் பொதுமக்கள் தேடுதல் நடத்திய நிலையில், யாரும் கிடைக்கவில்லை. இதன் பின்னர் வாகனத்தில் இருந்த ஆவணங்களைக் கொண்டு அது அருகில் உள்ள மாத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடையது என்று கண்டுபிடித்தனர்.
ராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை; நாளை உண்மை கண்டறியும் சோதனை
ஆனால் வாகன உரிமையாளரை தொடர்புகொள்ள முடியவில்லை. இருப்பினும் வாகன உரிமையாளரின் உறவினர்களை தொடர்புகொண்ட பொதுமக்கள் இருசக்கர வாகனம் கேட்பாரற்று கிடப்பதாகவும், வாகனத்தை ஓட்டிவந்த நபரை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளர்.
அதன்படி வீட்டிற்கு வந்து பார்த்த உறவினர்கள், வாகனத்தை ஓட்டிவந்தவர் வீட்டில் சாவகாசமாக உறங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே அவரது நண்பர்களிடம் இது தொடர்பாக விசாரித்துள்ளனர்.
மது போதையில் சாலையில் தள்ளாடிய நபர்; லாரி சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது அவர்கள் கூறுகையில், நேற்று மாலை அவர் மதுபோதையில் வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் வாகனம் பாதியில் நின்றுவிட்டது. மேலும் வாகனத்திற்கு பெட்ரோல் போட அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால், அவ்வழியாக வந்த சில நபர்களிடம் கடனாக பெட்ரோல் கேட்டுள்ளார்.
ஆனால் யாரும் பெட்ரோல் தர முன்வரவில்லை. பெட்ரோல் வாங்க பணம் இல்லாத விரக்தியில் அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தை கால்வாயில் வீசிவிட்டு சென்றுவிட்டதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.