Asianet News TamilAsianet News Tamil

பெருங்களத்தூர் - செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டத்தை கைவிடாதீர்கள் - மத்திய, மாநில அரசுக்கு இராமதாஸ் யோசனை

பெருங்களத்தூர், செங்கல்பட்டு  பறக்கும் சாலைத் திட்டத்தை கைவிடாமல் அதற்கு ஆகக்கூடய கட்டுமானச் செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

state and central government should continue the perungalathur chengalpattu flying road scheme said pmk founder ramadoss vel
Author
First Published Jun 3, 2024, 2:29 PM IST

பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன்  தயாரிக்கப்பட்ட பெருங்களத்தூர் - செங்கல்பட்டு இடையே  27 கி.மீ நீளத்திற்கு 6 வழி  பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு மாற்றாக வேறு திட்டத்தை செயல்படுத்த நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருந்தாலும் கூட, அதனால் எதிர்பார்த்த பயன் கிடைக்காது.

ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன்  சென்னை முதல் செங்கல்பட்டு வரை பறக்கும் சாலை அமைக்க வேண்டும் என்று பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகள், நிழல் நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றிலும் கூட இத்திட்டம் குறித்து  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வளர்ச்சி சார்ந்த இத்திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவும்  உள்ளது.

கட்சியவே கலைச்சிட்டேன் என் மனைவி எப்படியாவது எம்.பி. ஆயிடனும்; கையில் வேப்பிலையுடன் சரத்குமார் அங்கபிரதட்சணம்

பறக்கும் சாலைத் திட்டத்தின் தேவையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் ஏற்றுக் கொண்டு, அதை செயல்படுத்த வசதியாக  தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான சாலையை 8 வழிச் சாலையாக்க திட்டம் வகுக்கப்பட்டு, அதில் தாம்பரம் - செட்டிப்புனியம் வரையிலான 23 கி.மீ நீளச் சாலை எட்டுவழியாக விரிவுபடுத்தப்பட்டு விட்டது. அதன் மீது பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை 6 வழி  பறக்கும் சாலை அமைக்கப்பட்டால், அதில் வாகனங்கள் நிற்காமல் செல்ல முடியும் என்பதால், போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்  என்பது தான் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

ஆனால்,  பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.3523 கோடி செலவாகும் என்றும், இவ்வளவு செலவில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதற்காக  lபறக்கும் சாலையை பயன்படுத்துவோரிடமிருந்து அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டியிருக்கும்  என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்  தீர்மானித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.  இதற்கு மாற்றாக கிளாம்பாக்கம் முதல் போத்தேரி வரை 7 கி.மீ தொலைவுக்கு மட்டும்  பறக்கும் சாலை அமைக்கவும்,  மறைமலை நகர், ஃபோர்டு மகிழுந்து ஆலை, சிங்கப்பெருமாள் கோயில், மகிந்திரா சிட்டி ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைக்கவும் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. இது எதிர்பார்த்த பயனை அளிக்காது.

அனைத்து ரேசன் கடைகளிலும் 2 மாதங்களுக்கான பருப்பு, பாமாயிலை வழங்குங்கள் - அரசுக்கு அன்புமணி கோரிக்கை

ஜி.எஸ்.டி சாலையில் ஒவ்வொரு நாளும் ஒன்றரை கோடி வாகனங்கள் பயணிக்கின்றன.  விடுமுறை நாள்களில்  பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் போதும்,  சென்னைக்கு திரும்பும் போதும் இந்த எண்ணிக்கை 50%  வரை அதிகரிக்கிறது. அத்தகைய தருணங்களில் செங்கல்பட்டு முதல் சென்னை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.  இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில்,  எதிர்காலத்திலும்  போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க  பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவது தான் ஒரே தீர்வாக இருக்கும்.

சாலைகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கான பாதைகள் ஆகும்.  சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு  திட்டங்களை செயல்படுத்துவதில்  திட்ட மதிப்பீடு என்பது ஒரு தடையாக இருக்கக் கூடாது.  பெருங்களத்தூர் - செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதால் கிடைக்கும்  வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் பயன்களுடன் ஒப்பிடும் போது, அத்திட்டத்திற்கான செலவு என்பது மிகவும் குறைவு தான். இதைக் கருத்தில்  கொண்டு  பெருங்களத்தூர் - செங்கல்பட்டு  பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும். அதற்கான செலவை  மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios