ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல் எல்லைக்குட்பட்ட கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விஷ்வா. 38 வயதான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில், ஒரு வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலீசார் விஷ்வாவை தேடி வந்தனர். இந்த நிலையில், சுங்குவார் சத்திரம் அருகே சோகண்டி பகுதியில் ரவுடி விஷ்வா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த தனிப்படை போலீசார் விஷ்வாவை பிடிக்க முயன்ற போது போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்றுள்ளார்.
அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் ரவுடி விஷ்வா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ரவுடி விஷ்வா தாக்கியதில், காவல் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது போலீசாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட விஷ்வா, தன்னை காவல்துறை என்கவுண்டர் செய்யப் போவதாக உயர் அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் மனு அளித்திருந்தார்.
அதில் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்பத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் எஸ்.ஐ. தயாளன் உள்ளிட்ட காவல்துறையினரே பொறுப்பு என்பதையும் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக விஷ்வாவின் குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். இந்த என்கவுண்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
