பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை பகுதியை சேர்ந்தவர் அழகானந்தன் மகன் மணிகண்டன்(29). அதிமுக பிரமுகரான இவர் கோயிலில் கதை சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி(25) இருவரும் காதலித்து பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அதே பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த மகேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில்,  தம்பதியிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சில நாட்களாக மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று வெளியே சென்ற அவர் இரவு 10 மணியளவில் வீடு திரும்பினர். பின்னர், அவர் மனைவியுடன் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினார். 

இதற்கிடையில், அதிகாலையில் மணிகண்டனின் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மகேஸ்வரி படுக்கையில் பிணமாக கிடந்தார். அவரது கணவர் மணிகண்டன் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். 

படுக்கை அறையை சோதனையிட்டபோது மணிகண்டன் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில் நான் நேற்று இரவு வீட்டுக்கு வந்தபோது எனது மனைவி தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை இறக்கி படுக்கையில் போட்டேன். கர்ப்பிணியாக இருந்த எனது மனைவி போன பிறகு நான் மட்டும் உயிரோடு இருக்க முடியாது. எனது மனைவியும், குழந்தை சாவுக்குக் காரணமாகி விட்டேனே என இதனால் நானும் உன்னுடன் வந்து விடுகிறேன் என்று கடித்தில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.