கோவையைச் சேர்ந்தவர் கணேஷ். வயது 33. இவர் கடந்த ஆண்டு பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். இதே ரயிலில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டி ஒருவரும் பயணம் செய்துள்ளார். இருவரும் முன்பதிவு செய்திருந்த நிலையில் ஒரே பெட்டியில் பயணம் செய்ததாக தெரிகிறது.

கணேஷ் அந்த மூதாட்டியிடம் பயணத்தின் போது பேச்சு கொடுத்திருக்கிறார். அவரும் எதார்த்தமாக பேசியிருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் மூதாட்டியை தூங்க விடாமல் தொந்தரவு செய்யும் வகையில் பேசி இருக்கிறார். இதை அருகில் இருந்தவர்கள் கண்டித்தும் அந்த வாலிபர் கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனால் டிக்கெட் பரிசோதகரிடம் அந்த மூதாட்டி புகார் அளித்தார்.

டிக்கெட் பரிசோதகர் எச்சரித்தும் கணேஷ் கண்டுகொள்ளாததால் திருப்பூர் ரயில் நிலையம் வந்ததும் ரயில்வே காவல்துறையில் அவர் ஒப்படைக்கப்பட்டார். கணேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகினார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் முடிவில் மூதாட்டியை தொந்தரவு செய்த கணேஷிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவலர்கள் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.