கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அம்சவேணி. இந்த தம்பதியினருக்கு சவுமியா(16), சத்யப்ரியா(11) என இருமகள்களும் மணிகண்டன்(10), சபரிகிரிநாதன்(7) என இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகளான சத்யப்ரியாவிற்கு நுரையீரல் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஏழ்மை நிலையில் குடும்பத்தையும் சமாளித்து, மகளுக்கு சிகிச்சையும் அளித்து கஷ்டத்தில் இருந்திருக்கிறார் கோவிந்தராஜ். அவரது மனைவி அம்சவேணியும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இந்தநிலையில் நேற்று கோவிந்தராஜ் வேலை சம்பந்தமாக வெளியூர் சென்றுள்ளார். வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த அம்சவேணி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது. அதன்படி அரளி விதையை அரைத்து உணவால் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தார். பின் தானும் உண்டார்.

அப்போது குழந்தைகள் சாப்பாடு ஏன் கசக்கிறது? என்று கேட்டுள்ளனர். அதில் மனம் மாறிய அம்சவேணி, 4 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு 5 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுசம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.