இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 43 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை  1,520 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமை சிகிச்சையில் வைத்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தமிழகத்திலும் மிக கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு 24 மணி நேரமும் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கோவையில் பெண் காவலர் ஒருவருக்கு தற்போது கொரோனா உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

உலகை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடம்..?

கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த 40 வயது பெண் காவலர் ஒருவர் மேட்டுப்பாளையம் -அவினாசி சோதனைச்சாவடியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர் அன்னூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருக்கும் கொரோனா சிறப்பு வார்டில் காவலர் அனுமதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். முன்னதாக அன்னூரில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.