கோவை மாவட்டம் பாப்பம்பட்டி அருகே இருக்கும் செல்வராஜபுரத்தை சேர்ந்தவர் கூடலிங்கம் (வயது 40). இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கூடலிங்கம் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். லட்சுமி அந்த நாய் மீது அதிக பிரியத்துடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக லட்சுமி வளர்த்து வந்த நாய் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளது. அதற்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டில் வைத்திருக்கின்றனர். தனது செல்ல நாய் விபத்தில் சிக்கி காயமடைந்ததை லட்சுமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இருநாட்களாக மன வருத்தத்திலேயே இருந்துள்ளார்.

இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு லட்சுமி தற்கொலை செய்துள்ளார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர். அங்கு லட்சுமி பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அவரது கணவர் மற்றும் மகன்கள் கதறி துடித்தனர். அக்கம்பத்தினர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவலர்கள் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் லட்சுமி உண்மையிலேயே நாய்க்காக தான் தற்கொலை செய்தாரா? என்று அவரது குடும்பத்தினரிடம் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். செல்லநாய்க்காக எஜமானர் உயிரையே விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.