குட்டி யானை இறந்தது தெரியாமல் துதிக்கையால் தூக்கி சுமந்தபடி பெண் யானை சுற்றி திரிந்தது, சுமார் 3 மணி நேர பாசப்போராட்டத்துக்கு பின் இறந்த அந்த குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல வனவிலங்குகள் உள்ளன. இந்த காட்டுப் பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத் துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் எப்போதுமே ரோந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கலகுறிச்சி அருகே தாடகை நாச்சியம்மன் கோவில் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துக்கு சென்றனர். அப்போது, யானைகள் சத்தம் அதிகமாக கேட்டதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது, அங்கு ஒரு குட்டி யானை இறந்து கிடந்தது.

அப்போது குட்டியின் உடலை சுற்றி யானைகள் கூட்டமாக இருந்ததால் அதன் அருகே செல்ல முடியவில்லை. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு பின் குட்டி யானையின் உடலை விட்டு யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பிறகு குட்டியானையின் உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குட்டியானையின் உடல் மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே போடப்பட்டது.

பொள்ளாச்சி வனப்பகுதியில் கோபால்சாமி மலை பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான பெண் யானை சுற்றி திரிந்தது. இந்த யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இதற்கிடையில் நேற்று  முன்தினம் மாலையில் யானைகள் கூட்டமாக நின்று சத்தம் போட்டன.

இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது ஒரு குட்டி யானை இறந்து கிடந்தது. அதை சுற்றியும் பெண் யானை உள்பட யானைகள் நின்றிருந்தன. குறை பிரசவத்தில் பிறந்ததால் அந்த குட்டி யானை இறந்தது தெரிய வந்தது. இதற்கிடையில் பெண் யானை கண்ணீர் சிந்தியபடி துதிக்கையால் குட்டி யானையை தடவி கொடுத்தது, பின்னர் அந்த தாய் யானை துதிக்கையால் குட்டியின் உடலை தூக்கி சுமந்து கொண்டு அந்த பகுதியை சுற்றி வந்துள்ளது. மற்ற யானைகள் கூட்டமாக பாதுகாப்பாக  பெண் யானைக்கு நாலாபுறமும் சுற்றி நின்று கொண்டிருந்தன. 

சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் குட்டியின் உடலை போட்டு விட்டு கண்ணீருடன் பெண் யானை மீண்டும் காட்டு பகுதிக்குள் சென்றுள்ளது. குட்டி இறந்த சோகத்தில் இருந்த தாய் யானை, குட்டியை தேடி திரும்ப அதே பகுதிக்கு திரும்பி வருகிறதாக வனப்பகுதி அதிகாரிகள் கூறியுள்ளனர்.