வனத்துறை அதிகாரிகள் படித்துப் படித்துச் சொல்கிறார்கள், ‘அனுமதியின்றி டிரெக்கிங் வராதீர்கள்! உயிருக்கு உத்திரவாதமில்லை!’ என்று. ஆனால் நம்மாளுங்க அதை கேட்பதுமில்லை, வனத்துறை சொல்வதை மதிப்பதுமில்லை. விளைவு, மிக கோரமாக ஏதாவது சம்பவஙகள் நடந்தால் மட்டும், விக்கித்து நிற்பது வாடிக்கையாகிவிட்டது. 
கோயமுத்தூரை சேர்ந்த பிரசாந்த் இரும்பு பிஸ்னஸ் பண்ணுகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி, ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாக துறையில் வேலை பார்த்தார். அடிக்கடி வனப்பகுதிகளுக்கு டிரெக்கிங் செல்வது இவர்களின் பொழுதுபோக்காம். முடிந்தால் வனத்துறையின் அனுமதி பெற்று, அல்லது அனுமதியே இல்லாமல் போவார்களாம். 
இப்படித்தான் கடந்த 19-ம் தேதியன்று நண்பர்கள் குழுவுடன் பிரசாந்த் மற்றும் புவனேஸ்வரி இருவரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள பாலமலை எனும் மலைக்கு சென்றிருக்கிறார்கள். அது யானைகள் அதிகம் உலவும் பகுதியாம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் வனத்துறையினரும் பணியில் இல்லை. காரை மலையின் கீழே நிறுத்திவிட்டு இந்த டீம் டிரெக்கிங் சென்றிருக்கிறது. 


சில கிலோமீட்டர்களில் ஒரு கிராமத்தை கடந்து மீண்டும் நடந்திருக்கின்றனர். அப்போது காட்டு யானை ஒன்று வந்திருக்கிறது. யானையை கண்டதும் ஆளாளுக்கு அலறி ஓடியிருக்கிறார்கள். புவனேஸ்வரி சற்று பருத்த உடலுடையவர். அவரால் வேகமாக ஓட முடியவில்லை. ஆனால் கணவர் பிரசாந்த் ஓடியிருக்கிறார். இதற்குள் புவனேஸ்வரியை நெருங்கிய யானை அவரை பிடித்து இழுத்து, தூக்கி வீசி, மிதித்துக் கொன்றுவிட்டது.  அவரை கொல்கையில் யானை கடுமையாக பிளிறியிருக்கிறது. கூடவே புவனேஸ்வரியின் மரண ஓலமும்.  புவனேஸ்வரியை முடித்துவிட்டு ஓடிவிட்டது யானை. இதன் பின் கொஞ்சம் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த ஸ்பாட்டை நெருங்கிப் பார்த்துள்ளனர் மற்றவர்கள். ரத்த வெள்ளத்தில் சிதைந்து கிடந்துள்ளார் புவனேஸ்வரி. அதன் பின் வனத்துறையினர், ஆம்புலன்ஸுக்கெல்லாம் தகவல் தரப்பட்டு மற்ற சம்பிரதாயங்கள் நடந்துள்ளன. இந்த சூழலில்,  யானை துரத்துகையில் தான் மட்டும் ஓடி எஸ்கேப் ஆகிவிட்டாத அந்த பாவப்பட்ட கணவரை சமூக வலைதளங்களில் சிலர் திட்டித் தீர்க்கின்றனர். ’வெயிட்டான மனைவியால் ஓட முடியாது என்பது அந்த பரபரப்பு சூழ்நிலையிலும் கணவரின் மூளையில் உதித்திருக்க வேண்டும். ஏதோ முதலில் பதற்றத்தில் ஓடியிருந்தாலும் கூட, தன்னோடு எஸ்கேப் ஆகாத மனைவியை நோக்கி பின் திரும்பி ஓடி வந்திருக்க வேண்டும்.

மனைவியை அட்டாக் செய்யும் யானையை முயற்சித்திருக்க வேண்டும், அந்த யானை அவரை தாக்க வந்திருந்தாலுமே கூட தப்பில்லை. அப்படி மனைவியை காப்பாற்றிவிட்டு, அவர் வீழ்ந்திருந்தாலும் அதுதான் உண்மையான கணவனுக்கான வீரம், அழகு, பொறுப்பு. அதைவிடுத்து, தான் மட்டும் எஸ்கேப்பாகி தப்பியது அவலம். 
ஏனோ இந்த விஷயத்தில் தப்பிப் பிழைத்த பிரசாந்தை நினைத்து மனசு ஆறுதலடையவில்லை மாறாக ஆத்திரம் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளனர் அதில். 
ஒரேடியாய் பிரசாந்தை ‘மனைவியை தவிக்கவிட்டு, தான் எஸ்கேப்பாகிவிட்டார்’ என்று விமர்சித்துவிடக்கூடாது. பாவம் அந்த உயிர் பய சூழலில் மனசு அறிவுப்பூர்வமாக சிந்திக்காதே! அங்கே உண்மையில் என்னதான் நடந்தது என்பது புரியாமல், குற்றம் சொல்வதும் தவறு. புவனாவின் ஆன்மா சாந்தியடையட்டும்!