கோவையில் மூச்சு திணறல் காரணமாக 12ம் வகுப்பு பள்ளி மாணவி உள்பட 2 பேர் திடீரென உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தர்களா என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள ராமன் குட்டையை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மகள் ஆர்த்தி (18). இவர் அன்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதால் ஆர்த்தி வீட்டில் இருந்து வந்தார். 

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றார். சம்பவத்தன்று மூச்சு திணறல் அதிகமானதால் அவரை அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா என்று மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 

பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மனைவி வள்ளிநாயகம் (48). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருந்த இவர் மூக்கு பொடி போட்டார். அப்போது தொடர்ச்சியாக இருமல் வந்து கொண்டே இருந்தது. திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வள்ளி நாயகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.