கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. இந்த ஊரில் இருக்கும் மேம்பாலத்தில் இன்று காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரிக்கு முன்பாக ஆம்னி வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே வழியில் தனியார் பேருந்து ஒன்று தவறான பாதையில் வந்ததாக கூறப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து, ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரிக்கும் பேருந்துக்கும் இடையில் ஆம்னி வேன் சிக்கி கொண்டது. வேனில் நான்கு பேர் பயணம் செய்த நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்ற இருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவறான வழியில் வந்த பேருந்தால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.