தமிழகத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி, கேரளாவில் படித்து 10ம் வகுப்பில், பல்வேறு தடைகளையெல்லாம் தகர்த்து 95% மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார். 

தமிழக - கேரள எல்லையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட அடர்ந்த வனத்துக்குள் உள்ளது பூச்சிக்கொட்டாம்பாறை என்ற மலைக்கிராமம். அந்த ஊரில் முதுவர் பழங்குடி மக்கள் வசித்துவருகின்றனர். மின்சாரம், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லாத கிராமம் அது. செல்ஃபோன் தொடர்பே இல்லாத கிராமம். பேருந்துக்கே 8 கிமீ நடந்துசெல்ல வேண்டும். ஃபோனில் பேச வேண்டுமென்றால் கூட சில கிமீ தூரம் நடக்க வேண்டும்.

அப்படிப்பட்ட மலைக்கிராமத்தில் இருந்து, தினமும் சுமார் 100 கிமீ பயணித்து படித்த பழங்குடியின மாணவி ஸ்ரீதேவி, 10ம் வகுப்பில் 95% மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 

பூச்சிக்கொட்டாம்பாறை சேர்ந்த விவசாயி செல்லமுத்துவின் மகள் ஸ்ரீதேவி. அந்த ஊரில் இருந்து தினமும் சுமார் 100 கிமீ தூரம் பயணித்து கேரளாவின் சாலக்குடியில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார். பல கஷ்டங்களுக்கு நடுவே 100 கிமீ தூரம் பயணித்து படித்துவந்த ஸ்ரீதேவிக்கு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும்போது பெரிய பிரச்னை வந்துவிட்டது. அதுதான் கொரோனா.

கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதனால் அவர் தேர்வு எழுதுவது கடினமானது. அந்த சவாலையும் எதிர்கொண்டு, கேரள அரசாங்கத்தின் உதவியுடன் 10ம் வகுப்பில் சாதனை படைத்துள்ளார். லாக்டவுன் அமலில் இருந்த நிலையில், தமிழக-கேரள எல்லைவரை தனது தந்தையுடன் நடந்தும் பைக்கிலும் சென்றார் ஸ்ரீதேவி. கேரள எல்லையிலிருந்து அவரது பள்ளி உள்ள சாலக்குடிக்கு கேரள அரசாங்கம், சிறப்பு பேருந்தை ஏற்பாடு செய்து அழைத்து சென்றது. இவ்வளவு கஷ்டப்பட்டு தேர்வு எழுதிய மாணவி ஸ்ரீதேவி, பத்தாம் வகுப்பில் 95% மதிப்பெண்ணை பெற்று சாதனை படைத்துள்ளார். 

சாதனையாளர்கள் சாக்கு போக்கெல்லாம் சொல்லமாட்டார்கள். கடும் கஷ்டங்களுக்கு நடுவேயும் சற்றும் தளராமல், அனைத்து தடைகளையும் தகர்த்து சாதித்துள்ளார் ஸ்ரீதேவி. மருத்துவர் ஆவது தான் தனது கனவு என்று கூறியிருக்கிறார் பழங்குடியின மாணவி ஸ்ரீதேவி.