கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் சுல்தான்(82). இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கோவையில் இருக்கும் மசூதி ஒன்றில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் சுல்தான், அங்கேயே தங்கி இருக்கிறார். போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் இடங்களில் சுல்தானை காணலாம் என்கிறார்கள் கோவைவாசிகள். தினமும் காலையில் இருந்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் இந்த முதியவர்.

காலையில் தொழுகையை முடித்து விட்டு 7 முதல் 10 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்கிறார். அதன்பிறகு எந்த இடத்தில் அதிக டிராபிக் ஏற்படுகிறதோ அங்கு சென்று பணியில் இருக்கிறார். இதையே தனது பழக்க வழக்கமாகவே சுல்தான் வைத்துள்ளார். இவரின் செயலை பாராட்டி போலீசாரும் அவரை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சுல்தான் கூறும்போது கடந்த பல வருடங்களாக போக்குவரத்தை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த பணி அவரது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் போலீசார் வந்தவுடன் ஒதுங்கிக்கொண்டதாக கூறும் அவர், தற்போது காவலர்கள் உடன் சேர்ந்து போக்குவரத்து நெரிசல் சரி செய்யும் பணியை மேற்கொள்வாக கூறுகிறார்.

சுல்தானுக்கு மகனும் மகளும் இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து அவர் வாழவில்லை. பள்ளிவாசலில் தங்கியிருக்கும் அவர் அவ்வப்போது சென்று பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் பார்த்து வருகிறார். பள்ளிவாசலில் அவருக்கு கொடுக்கப்படும் 300 ரூபாய் சம்பளம் தான் அவரது மாத வருமானமாக இருக்கிறது. தள்ளாத வயதிலும் பொது சேவையை தவறாமல் செய்து வரும் சுல்தான் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக தான் திகழ்ந்து வருகிறார்.