கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கிறது செட்டிபாளையம். இங்கிருக்கும் பேருந்து நிலையத்தில் குட்கா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியில் மறைமுகமாக நோட்டமிட்டனர். அப்போது இரண்டு நபர்கள் கல்லூரி மாணவர்களுக்கு குட்கா விற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் திருச்சியைச் சேர்ந்த குமாரசாமி(30), பொன்னமராவதியைச் சேர்ந்த பரமசிவம்(20) என்பது தெரிய வந்தது. 20 வயது இளைஞரான பரமசிவம் ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். குமாரசாமி ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இரண்டு பேரும் சேர்ந்து பல இடங்களில் ஒன்றாக குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் இரண்டு பேரையும் சிறையில் அடைத்துள்ளனர். பொது இடத்தில் கல்லூரி மாணவர் ஒருவரே குட்கா விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.